ஆலிமாக்களுக்கான “இஸ்லாமிய கல்வி அறிவியல்” (ISLAMIC ACADEMICAL SCIENCES) என்ற தலைப்பில் அம்மாபட்டினம் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் 26,27-02-2022 ஆகிய இரண்டு நாட்கள் பயிலரங்கம் நடைபெற்றது.
முஸ்லிம் சமூகத்தின் வளர்ச்சி என்ற தளத்தில் நின்று சிந்திக்கும் பணியாற்றும் யாரும், இஸ்லாமிய அறிவுத் துறையை அதன் மரபு வழியில் மீள்கட்டமைப்பு செய்யும் முயற்சிகளுக்குத்தான் முன்னுரிமை அளிப்பார்கள். இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய எல்லா அறிஞர்களும் தலைவர்களும் அதைத்தான் செய்துள்ளனர்.
இஸ்லாமிய அறிவுத் துறையால் மட்டுமே முஸ்லிம் சமூகத்தின் சிந்தனையை வாழ்வியலை இலக்குடையதாக தரம் உயர்த்தி, அதை உலக மக்களுக்கு ஈர்ப்புடையதாகவும் முன்னிறுத்த முடியும்.
இஸ்லாமிய கல்வி அறிவியலின் அடிப்படை இயல்களில் (உஸூல்) ஞானமுள்ள பெண் அறிஞர்கள் சமுதாயத்தில் பெருகினால் அடுத்தடுத்த தலைமுறையின் இஸ்லாமிய அறிவு மிகவும் விசாலமானதாக இருக்கும்.
நடைபெற்ற இரண்டு நாள் பயிலரங்கில் அல்குர்ஆனையும் ஹதீஸ்களையும் அதன் இலக்கண முறைப்படி ஆழமாக புரிந்து அணுகுவதற்கான அடிப்படைப் பாடங்களை (உஸூல்) தமிழகத்தின் தலைசிறந்த அறிஞர்கள் பயிற்றுவித்தனர்.

உஸூலுல் ஹதீஸ் தலைப்பில், புதுச்சேரி கடுவனூரில் அமைந்துள்ள ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியின் முதல்வர் மௌலவி பேரா.முஹம்மது கான் பாகவி வகுப்பு நடத்தினார்கள்.

உஸூலுத் தஃப்ஸீர் தலைப்பில் சென்னையில் உள்ள ஆலிம் பப்ளிகேஷன்ஸின் மொழிபெயர்ப்பாளர் மௌலவி யூஸுஃப் சித்தீக் மிஸ்பாஹி M.A., M.Phil., விரிவாக விளக்கம் அளித்தார்கள்.

உஸூலுல் ஃபிக்ஹ் தலைப்பில் சென்னை BSA கிரசண்ட் பல்கலைக் கழகத்தின் புகாரி ஆலிம் அரபிக் கல்லூரி இணை பேராசிரியர் முனைவர் மௌலவி அப்துஸ் ஸமது நத்வி வகுப்பெடுத்தார்கள்.

வஹி & வரலாற்று ஒளியில் இறுதி நபித்துவம் என்ற தலைப்பில் தஞ்சை பாபநாசத்தில் உள்ள தாருல் இக்லாஸ் ஷரீஅத் கல்லூரியின் முதல்வர் மௌலவி M.ஷேக் அப்துல் காதிர் காஷிஃபி காஸிமி தெளிவாகவும் விரிவாகவும் பயிற்சி வழங்கினார்கள்.

இஜ்திஹாத் ஒரு சமகாலப் பார்வை தலைப்பில் சென்னை BSA கிரசண்ட் பல்கலைக் கழகத்தின் புகாரி ஆலிம் அரபிக் கல்லூரி இணை பேராசிரியர் முனைவர்.மௌலவி அப்துல் ஹை ஹஸனி நத்வி சமகால நிகழ்வுகளை இஸ்லாமிய சட்டவியலின் மூலம் எப்படி அணுகுவது என்பதை விளக்கினார்.

இஸ்லாமிய உயிரியல் & சுற்றுச்சூழல் கல்வி தலைப்பில் மேலப்பாளையம் TIME School லின் இஸ்லாமியத் துறை தலைவர் மௌலவி முஹம்மது மீரான் தாவூதி சிறப்பாக உரையாற்றினார்கள்.

இந்த பயிலரங்கில், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஆலிமாக்களும் முபல்லிஹாக்களும், அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு மாணவிகளும் கலந்துகொண்டார்கள்.
இந்த பயிலரங்கின் மூலம் இஸ்லாமிய கல்வி அறிவியலின் நுணுக்கமான பகுதிகளை அறிஞர்கள் அனைவரும் விளக்கி உரையாடியது எங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது என்று கலந்து கொண்டவர்கள் சொன்னார்கள்.
அல்ஹம்து லில்லாஹ்.