



ஆயிரக்கணக்கான பெண் கல்வியாளர்களை உருவாக்கும் ஒற்றை இலக்குடன் இயங்கும் அம்மாபட்டினம் அன்னை கதீஜா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் இறுதியாண்டு மாணவிகளுக்கு மலேசிய நாட்டில் உள்ள International Islamic University & International Institute of Islamic Thought and Civilization (IIUM & ISTAC) ஆகிய நிறுவனங்களில் இரண்டுநாள் சர்வதேச சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த சர்வதேச பயிற்சி நிகழ்ச்சியில், அன்னை கதீஜா கல்லூரியில் மூன்று ஆண்டுகள் பட்டப்படிப்புடன் ஆலிமா படிப்பையும் இணைத்து பயிலும் 13 மாணவிகள் தன்னார்வத்துடன் கலந்து கொண்டனர்.
இந்த பயிற்சி வகுப்புகளை சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் Education & Psychology துறையைச் சேர்ந்த தலைசிறந்த பேராசிரியர்கள் நடத்தினர். பயிற்சி முடிவில் மாணவிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்த சான்றிதழ்கள், மாணவிகளின் மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி கல்விக்கான முக்கிய ஆதாரமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இரண்டு கல்வித் துறைகளையும் இணைத்து பயிற்சி பெற்ற இந்த மாணவிகள், எதிர்காலத்தில் இஸ்லாமிய நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள், பெண்கள் மத்ரஸாக்கள் ஆகிய கல்வி நிறுவனங்களுக்கு அறிவுச் சொத்தாக இருப்பார்கள். மேலும், அடுத்த தலைமுறை முஸ்லிம் பிள்ளைகள் இஸ்லாமிய பயிற்சி மற்றும் பண்பாட்டின் வழியாக நவீன அறிவை பெறுவதற்கு இந்த மாணவிகள் பெரும் பங்காற்றுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.